அக்டோபர், 2024 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: அக்டோபர் 2024

மிகபெரிய பிளவு

புகழ்பெற்ற "பீனட்ஸ்" என்ற நகைச்சுவை இதழில், தி கிரேட் பம்ப்கின்  மீதான நம்பிக்கைக்காக 'லினஸ்' என்பவரின் நண்பர் அவரைத் திட்டுகிறார். விரக்தியுடன் விலகிச் சென்று, லினஸ் கூறுகிறார், “பிறருடன் ஒருபோதும் விவாதிக்கக் கூடாத மூன்று விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்; மதம், அரசியல் மற்றும்  தி கிரேட் பம்ப்கின்!"

தி கிரேட் பும்ப்கின் என்பது லினஸின் கற்பனையில் மட்டுமே இருந்தது, ஆனால் மற்ற இரண்டு காரியங்கள் மிகவும் உண்மையானவை. அவை நாடுகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பிரிக்கிறது. இயேசுவின் காலத்திலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. பரிசேயர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்களாகப் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை அப்படியே பின்பற்ற முயன்றனர். ஏரோதியர்கள் மிகவும் அரசியல் ரீதியானவர்கள், இருப்பினும் இரு பிரிவினரும் யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்பினர். இயேசுவுக்கோ அந்த நோக்கமில்லை, எனவே அவர்கள் அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டக் குறுக்குக் கேள்வியுடன் அணுகினர்: இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? (மாற்கு 12:14-15). இயேசு ஆம் என்று சொன்னால், மக்கள் அவரை வெறுப்பார்கள். அவர் இல்லை என்று சொன்னால், ரோமர்கள் அவரை கிளர்ச்சிக்காகக் கைது செய்யலாம்.

இயேசு ஒரு நாணயம் கேட்டார். "இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?" என்று கேட்டார் (வ. 16). அது இராயனுடையது என்பது அனைவருக்கும் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்"  (வ. 17). அவருடைய முக்கியத்துவங்களைச் சீராக வைத்திருந்தார், இயேசு அவர்களின் பொறியைத் மேற்கொண்டார்.

இயேசு தம் பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றி, நாமும் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தேடலாம், எல்லா கருத்து வேறுபாடுகளிலிருந்தும் விலகி, சத்தியமானவரை நோக்கி கவனத்தைத் திருப்பலாம்.

அழகான ஓர் ஆச்சரியம்

உழப்பட்ட நிலத்தில் ஒரு ரகசியம் இருந்தது, ஏதோ மறைந்திருந்தது. அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு, லீ வில்சன் தனது எண்பது ஏக்கர் நிலத்தைத் தனது மனைவி இதுவரை கண்டிராத மிகப் பெரிய மலா்கள் பூக்கும் தோட்டத்தை பரிசை வழங்குவதற்காக ஒதுக்கினார். அவர் ரகசியமாக எண்ணற்ற சூரியகாந்தி விதைகளை விதைத்திருந்தார், அது இறுதியில் 1.2 மில்லியன் சூரியகாந்தி செடிகளாக வெடித்தது, அவரது மனைவிக்குப் பிடித்தவை. சூரியகாந்திப் பூக்கள் தங்கள் மஞ்சள் கிரீடங்களை விரித்தபோது, ​​ரெனி லீயின் அழகான அன்பின் செயலால் திக்குமுக்காடி அதிர்ச்சியடைந்தார்.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யூதாவின் மக்களிடம் பேசுகையில், தேவன் அவர்களுடன் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர்களால் இப்போது காணமுடியாவிட்டாலும்,  அவர்கள் தமக்குச் செய்த துரோகத்திற்காக  அவர்களுக்கு எதிராக அவர் வாக்களித்த நியாயத்தீர்ப்புக்குப் பிறகு (ஏசாயா 3:1-4:1) ஒரு புதியதும் பொன்னானதுமான நாள் விடியும். "அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்." (4:2). ஆம், அவர்கள் பாபிலோனிய கைகளில் பேரழிவையும் சிறையிருப்பையும் அனுபவிப்பார்கள், ஆனால் ஒரு அழகான “கிளை" அப்போது தரையிலிருந்து ஒரு புதிய தளிராக வெளிப்படும். அவருடைய ஜனங்களில் மீதியாயிருப்பவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு  ("பரிசுத்தனென்று", வ. 4), சுத்திகரிக்கப்பட்டு (வ. 4), மற்றும் அவரால் அன்பாக வழிநடத்தப்பட்டுப் பராமரிக்கப்படுவார்கள் (வ. 5-6).

நம்முடைய நாட்கள் இருண்டதாகவும் தேவனுடைய வாக்குகளின் நிறைவேற்றம் மறைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றலாம்  ஆனால் விசுவாசத்தினால் நாம் அவரைப் பற்றிக்கொள்ளும்போது, ​​ஒரு நாள் அவருடைய "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும்" (2 பேதுரு 1:4) அனைத்தும் நிறைவேற்றப்படும். ஒரு அழகான புதிய நாள் காத்திருக்கிறது.

ஜெபிக்கும்படி இடைநிறுத்துங்கள்

மார்ச் 24, 2023 அன்று தனது வானிலை முன்னறிவிப்பின் போது மிசிசிப்பியில் உள்ள ஒரு வானிலை ஆய்வாளர், ஆறு எளிய மற்றும் ஆழமான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பிரபலமானார். மேட் லௌபன், கடுமையான புயலை ஆய்வு செய்துகொண்டிருந்தார், அமோரி நகரத்தை பேரழிவுகரமான சூறாவளி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்தார். அப்போதுதான் உலகமெங்கும் கேட்கப்பட்ட, "அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து அவர்களுக்கு உதவும். ஆமென்" என்ற ஜெபத்தை லௌபன் தொலைக்காட்சி நேரலையில் இடைநிறுத்தி ஜெபித்தார். அந்த ஜெபம்தான் தங்களைப் பாதுகாப்பாய் மறைத்துக்கொள்ள உணர்த்தியதாக சில  பார்வையாளர்கள் பின்னர் கூறினர். அவரது தன்னிச்சையான மற்றும் இதயப்பூர்வமான ஜெபம், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற உதவியிருக்கலாம்.

நம்முடைய ஜெபங்களும் மாற்றத்தை ஏற்படுத்தும். அவை நீளமாக இருக்க வேண்டியதில்லை. அவை குறுகியதாகவும் இனிமையாகவும் மற்றும் நாளின் எந்த நேரத்திலும் ஜெபிக்கக் கூடியதாக இருக்கலாம். நாம் வேலையிலிருந்தாலும் சரி, நேரமின்றி இயங்கிக்கொண்டிருந்தாலும் சரி அல்லது விடுமுறையிலிருந்தாலும் சரி, நாம் “இடைவிடாமல் ஜெபிக்கலாம்” (1 தெசலோனிக்கேயர் 5:17).

நாள் முழுவதும் நாம் ஜெபிப்பதைக் கேட்கத் தேவன் விரும்புகிறார். நாம் கவலைக்கும் பயத்திற்கும் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்முடைய எல்லா கரிசனைகளையும் கவலைகளையும் தேவனிடம் கொண்டு செல்ல முடியும் என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7).

நாம் ஒரு வறட்சியான நாளை அனுபவித்தாலும், அல்லது வாழ்க்கையின் உண்மையான அல்லது அடையாளப்பூர்வமான புயல்களால் தாக்கப்பட்டாலும், நாள் முழுவதும் இடைநிறுத்தி, ஜெபிக்க நினைவில் கொள்வோம்.

சுமைகளை அகற்றுதல்

கல்லூரியில், நான் ஒரு பருவ தேர்விற்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பைப் படித்தேன். வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் எழுதிய அனைத்தையும் கொண்ட மாபெரும் பாடப்புத்தகம் தேவைப்பட்டது. புத்தகம் பல கிலோ எடையுள்ளதாக இருந்தது, நான் அதை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல  சில மணிநேரங்கள் தேவைப்பட்டது. அந்த சுமையைக் கட்டி சுமப்பது  என் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது, அது இறுதியில் என் புத்தகப்பையில் ஒரு உலோக இணைப்பையும் உடைத்தது!

சில விஷயங்கள் நம்மால் சுமக்க முடியாத அளவுக்கு கனமானவை. உதாரணமாக, கடந்த காலத்தில் உண்டான காயம் கொண்டுவருகிற உணர்வுபூர்மான சுமைகள், கசப்பாலும் வெறுப்பாலும் நம்மை மூழ்கடிக்கலாம். ஆனால், பிறரை மன்னிப்பதாலும், முடிந்தால் அவர்களுடன் ஒப்புரவாவதின் மூலமாகவும் நாம் விடுதலை பெற்றிடத் தேவன் விரும்புகிறார் (கொலோசெயர் 3:13). ஆழமான காயம் ஆற, அதிகமான நேரம் ஆகலாம். பரவாயில்லை. தனது சேஷ்டபுத்திரபாகத்தையும் ,ஆசீர்வாதத்தையும் திருடியதற்காக யாக்கோபை மன்னிக்க ஏசாவுக்கு பல ஆண்டுகள் ஆனது (ஆதியாகமம் 27:36).

இருவரும் இறுதியாக மீண்டும் இணைந்தபோது, ​​​​ஏசா கருணையுடன் தனது சகோதரனை மன்னித்து, "அவனைத் தழுவினார்" (33:4). அவர்கள் இருவரும் கண்ணீர் வடிக்கும்வரை ஒரு வார்த்தை கூட பரிமாறிக்கொள்ளவில்லை. காலப்போக்கில், கொலை செய்யக்கூட தூண்டும் கோபத்தை ஏசா விட்டுவிட்டார் (27:41). அந்த ஆண்டுகளில், யாக்கோபு தனது சகோதரனுக்கு இழைத்த பொல்லாங்கு எப்பேர்பட்டது என்பதை உணர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் இணைகையில், முழுவதும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார் (33:8-11).

இறுதியில், இரு சகோதரர்களும் மற்றவரிடமிருந்து எதுவும் தேவைப்படாத நிலைக்கு வந்தனர் (வ. 9, 15). மன்னிக்கவும் மன்னிக்கப்படவும் மற்றும் கடந்த காலத்தின் கனமான சுமையிலிருந்து விடுபட்டு நடப்பது மட்டுமே போதுமானதாயிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாவங்களை களையெடுத்தல்

எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.

அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.

நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, ​​நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.

நாம் தனியாக இல்லை

ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.

நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.

நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார்.  ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.

வசன பயிற்சி

1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.

இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.

பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).

வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.